ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்குப் பிறகு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆக்ராவை சுற்றிப்பார்த்தனர்.
ஆக்ரா கோட்டையில் அவர்களுக்காக இசை நிகழ்ச்சிகள், லேசர் லைட் ஷோ உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட ஆக்ரா கோட்டையில் சுவர்களில் விரிசல் விட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோட்டையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட 'திவான் இ ஆம்' என்ற சந்திப்புக்கூடத்தில் விரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சுவர்களில் பூச்சுகள் உரிந்ததாகவும் தெரிகிறது.
கலாசார நிகழ்ச்சிகள் நடத்தியதே விரிசல் ஏற்படக் காரணம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாரம்பரிய நினைவுச் சின்னங்களிலோ, புராதான சுற்றுலாத் தலங்களிலோ நிகழ்ச்சிகள் நடத்தினால், 40 டெசிபல் வரை மட்டுமே ஒலி எழுப்ப யுனெஸ்கோ அனுமதி அளித்துள்ளதாகவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஒலி எழுப்பியதால் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.