சிலிகுரி : மேற்கு வங்கத்தில் வேட்புமனு தாக்கலின் போது ஏற்பட்ட வன்முறையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி 75 ஆயிரம் இடங்களுக்கான கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதியில் வன்முறைகள் வெடித்து வருகின்றன. மாநிலத்தை அளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 7 பேர் பலியானதாக கூறப்பட்டு உள்ளது. கடந்த 15ஆம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவு பெற்றது. உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ரா பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மன்சூர் அலெம் என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்றார்.
தொகுதி வளர்ச்சி அலுலவர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த மன்சூர் அலெமை, எதிர்க்கட்சியனர் தாக்கியதாக கூறப்படுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றவர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மன்சூர் அலெம் மற்றும் அவரது உறவினர் படுகாயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 நாட்களாக உயிருக்கு போராடி வந்த மன்சூர் அலெம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மன்சூர் அலெமின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டுல் படுகாயம் அடைந்த மன்சூர் அலெமின் உறவினர் தொடர் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மன்சூர் அலெம் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் மன்சூர் அலெம் துப்பாக்கிச் சூடு நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும், மாநிலத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், 11ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடியின் யோகா தின விழா!