கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டின் மூன்றாம்கட்ட ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII - Serum Institute of India), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவித்துள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் இந்தத் தடுப்பூசி மருந்து முதலில் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி மருந்தாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக மூத்த மருத்துவ நிபுணரான டாக்டர் சுனீலா கார்க், ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் இயக்குனரும் பேராசிரியருமான டாக்டர் கார்க், மூன்றாம்கட்டப் பரிசோதனைகளுக்கு வெற்றிகரமாக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நாம் ஆன்டிபாடிகளின் பரவல் குறித்து சரியாக அறிந்து கொள்ளப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிகம் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவமாக உருவெடுத்துள்ள எஸ்ஐஐ (சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா) ஏற்கனவே 40 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசி மருந்தைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமையகத்தின் (DCGI - Drugs Controller General of India) அபாயகர உற்பத்தி மற்றும் கையிருப்பு உரிமத்தின் கீழ் இந்தத் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் "40 மில்லியன் டோஸ்கள் மருந்து தயாரித்துள்ளது நமது தன்னம்பிக்கையைக் காட்டினாலும், நாம் இந்த சோதனைக் கட்டம் முடிவடையும்வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என மருத்துவர் கார்க் தெரிவித்துள்ளார்.
'கோவிஷீல்ட்' தடுப்பூசி மருந்தின் கிளினிக்கல் ட்ரையலுக்கான நிதி உதவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும், பிற நிதி உதவிகளை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவும் ஏற்கனவே அளித்துள்ளன. தற்போது 15 வெவ்வேறு பரிசோதனை மையங்களில் SII - ICMR இணைந்து கோவிஷீல்டின் 2/3ஆம் கட்டப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.