இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள வயது வந்தோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், இரண்டு முதல் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்குச் செலுத்த மத்திய மருந்தக ஆணைய நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை இந்திய மருந்தக கட்டுப்பாட்டு ஆணையம் விரைவில் ஏற்று, பொதுப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு நன்றி தெரிவித்து பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாரத் பயோடெக் அறிக்கை
அந்த அறிக்கையில், "குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்ட பரிசோதனை விவரங்களை பாரத் பயோடெக் நிறுவனம் நிபுணர் குழுவிடம் அளித்தது. அதை விரிவாக ஆராய்ந்த நிபுணர் குழு தடுப்பூசியை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது. 2-18 வயதினருக்கு கோவிட்-19 தடுப்பூசிக்கான ஒப்புதல் பெறும் உலகின் முதல் நிறுவனம் பாரத் பயோடெக் தான்.
இதற்கு ஒப்புதல் அளித்த நிபுணர் குழுவிற்கு நன்றி. தடுப்பூசிகளை விரைவில் சந்தைக்கு கொண்டுவரும் முயற்சியை நிறுவனம் மேற்கொள்ளும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 96 கோடியே 13 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 68 கோடியே 86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ்கள் தடுப்பூசியும், 27 கோடியே 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது