உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாதிரி, உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ராய்ட்டர்ஸ் கூற்றுப்படி, "கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த 166 நாள்களில் 20 லட்சம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, மெக்சிகோ ஆகிய நாடுகளில்தான் 50 விழுக்காடு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், பெரு, ஹங்கேரி, போஸ்னியா, செக் குடியரசு, ஜிப்ரால்டர் ஆகியவற்றில் அதிக இறப்பு விகிதங்கள் ஏற்பட்டுள்ளன.