இந்த ஆண்டு பூரம் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.23) கொண்டாடப்படவிருந்த நிலையில், திருவிழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு தற்போது அறிவித்துள்ளது. பூரம் அன்று விழா சடங்குகளைக் குறைக்க முடிவெடுத்துள்ள கேரள அரசு, பொது மக்களை இந்த ஆண்டும் திருவிழாவிற்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி விழா ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே பூரத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுத்த எதிர்ப்புக் குரல்கள்
முன்னதாக இந்த ஆண்டு பூரம் திருவிழாவை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த விழாவின் முக்கிய அமைப்பாளர்களான திருவம்பாடி, பரமேக்காவு கோயில்கள், தற்போது அரசின் இந்த முடிவுக்கு உடன்பட்டுள்ளன.
முன்னதாக இந்த ஆண்டு பூரம் கொண்டாடுவதற்கும், கேரள அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் குரல் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சூர் பூரம் திருவிழா
கேரள மாநிலத்தின் தாய் திருவிழாவாகப் பார்க்கப்படும் திருச்சூர் பூரம் திருவிழா, தொடர்ந்து இரு நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை, கொச்சி மகாராஜா சக்தன் தம்பூரான் 18ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்தார்.
செண்ட மேளங்கள் முழங்க 50க்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு, வானவேடிக்கைகளுடன் நடத்தப்படும் திருவிழா உலகப் புகழ்பெற்றது. இதனைப் பார்க்க பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து செல்வார்கள். இந்தத் திருவிழாவில் நடத்தப்படும் யானைகளின் ஊர்வலம் பிற்பகலில் தொடங்கி அடுத்த நாள் வரை தொடரும்.
இதையும் படிங்க:ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள மிசோரம்