கேரளாவில் 26 ஆயிரத்து 685 பேர் கடந்த 24 மணி நேரத்தில்கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சிலர் கரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளைப் பதிவிடுவதை அம்மாநில காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து, கரோனா குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில காவல் துறை தலைவர் லோக்நாத் பெஹெரா தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பற்றி சமூக வலைதளங்களில் சிலர் கண்மூடித்தனமாக எழுதிவருவதாகக் குறிப்பிட்ட அவர், அவை அறிவியலுக்கு புறம்பான கருத்துகள் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக,"இதுபோன்ற போலி செய்திகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதைப் பகிர்வதும் குற்றம்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இது போன்ற பொய் பரப்புரைகள் குறித்து காவல் துறை கவனத்திற்கு வரும்பட்சத்தில், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலி தகவல்களை தடுக்க சைபர் கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தவறான செய்திகளைப் பரப்புவர்களைக் கேரள காவல் தலைமையகத்திலுள்ள விசாரணைக் குழு, சைபர் கண்காணிப்பு குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.