கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆந்திரா, அஸ்ஸாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் சுகாதார அமைச்சர்களுடன் காணொலிக் கட்சி மூலம் இன்று (நவ. 09) சந்திப்பு நடத்தினார்.
அப்போது பேசிய அவர், "கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டன. கரோனாவால் கடந்த 10 மாதம் பயணத்தில் நாம் பல கட்டங்களைக் கடந்துவந்துள்ளோம். பிரதமர் மோடியின் தலைமையில் ஊரடங்கு விதிமுறைகளை நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றினர். கரோனா நடவடிக்கையில் உலகின் பல வளர்ந்த நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று (நவ. 09) காலை நிலவரப்படி கரோனாவிலிருந்து 92.56 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் தற்போது கரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. தற்போது இந்தியாவில் ஐந்து லட்சம் பேர் கரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், பலர் குணமடைந்துவருகின்றனர்" என்றார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 45 ஆயிரத்து 903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்து 53 ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 409 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 26 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது எனமத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.