டெல்லி:கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 30 விழுக்காட்டினர் மனநலம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முறையினையும், மருத்துவமனையில் இருக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதில், கரோனா வைரஸ் காரணமாக பலர் மனச்சோர்வு, மனஉளைச்சல், உளவியல் துயரங்கள், மன அழுத்த அறிகுறிகள், தூக்கமின்மை, பிரமைகள், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தொற்றைக் கட்டுப்படுத்துவதுடன், இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்க வேண்டும். அது குறித்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மனநல நிபுணர்களுக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் தேவை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கரோனா சிகிச்சை மையத்தில் ஒரு மனநல மருத்துவருடன் நேரிலோ அல்லது தொலைதொடர்பு மூலமோ ஆலோசிக்க வசதியைக் கொண்டிருக்க வேண்டும். அதே நேரத்தில் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு மனநல மருந்துகளும் திடீரென நிறுத்தப்படக்கூடாது.