டெல்லி:நாட்டில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா வைரஸ் பாதிப்பு சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது நாட்டில் உள்ள கரோனா வைரஸ் பாதிப்புகளில் 74 விழுக்காடு கேரள மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கரோனா பரிசோதனைகளை மீண்டும் அதிகரியுங்கள் - கரோனா வைரஸ் பாதிப்பு
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களான கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை மீண்டும் கரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், "கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மாநிலத்தில் கரோனா சிகிச்சைகள் அனைத்தும், ஆர்டி-பிசிஆர் முறையைப் பின்பற்றியே எடுக்கப்படவேண்டும். மாநிலத்தில் விரைவான மற்றும் கடுமையான கரோனா பரிசோதனைகளை பின்பற்ற வேண்டும்.
ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கரோனா பரவலைத் தவிர்க்கலாம். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,112 வழக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவைப் போலவே, பஞ்சாபிலும் கடந்த ஏழு நாட்களில் தினசரி புதிய வழக்குகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.