ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தடுப்பூசி நிறுவனம், பாரத் பயோடெக். கரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை உற்பத்தி செய்து, உரிய அங்கீகாரம் பெற்று நாடு முழுவதும் விநியோகித்து வருகிறது.
இந்நிலையில் கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் காட்டப்பட்டு, வரும் ஜூலை மாதத்தில் பொதுவெளியில் தெரிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், 'கோவேக்ஸின் தடுப்பூசியின் பலன்களை சிலரிடம் போட்டுவிட்டுப் பரிசோதிக்கிறோம். அப்போது கோவேக்ஸினின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு திறன் 78 விழுக்காடாக உள்ளது. மருத்துவமனையில் சேர்ப்பதற்கு எதிரான செயல்திறன் 100 விழுக்காடாக உள்ளது.
நாங்கள் முன்னதாக சிறந்த பாதுகாப்பான தடுப்பூசிகளை உலகளவில் உருவாக்கி இருக்கிறோம். குறிப்பாக, போலியோ, ஜப்பானிய என்சிபாலிடிஸ், ரேபீஸ், ஹெபாடைடீஸ் ஏ ஆகிய தொற்றுகளுக்கு உரிய தடுப்பூசிகளைத் தயாரித்து இருக்கிறோம்' என விளக்கமளிக்கப்பட்டது.