டெல்லி : மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் 29ஆம் தேதி வரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
கடந்த 2021-22ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் அரசால் வெளியிடப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும், அதனால், சில தனியார் நிறுவனங்கள் லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு கைமாறாக அரசியல் கட்சியினர் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினாய் குமார் சக்சேனா பரிந்துரை செய்தார். முறைகேடு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இதே விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்து உள்ளதாகக் கூறி அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து தனியாக விசாரித்து வருகிறது.
இந்தப் புகார் தொடர்பாக மதுபானத் துறையை, தன் வசம் வைத்து இருந்த டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம், மணீஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.