தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ காவல்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின், சிபிஐ காவலை மேலும் 2 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு
மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு

By

Published : Mar 4, 2023, 9:59 PM IST

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், மணீஷ் சிசோடியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவரை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் 5 நாள் காவல் முடிவடைந்ததால், சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ தரப்பில், "மணீஷ் சிசோடியாவு விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. பல கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. மேலும் 3 நாட்களுக்கு காவலை நீட்டிக்க வேண்டும்" என வாதாடப்பட்டது.

தொடர்ந்து சிசோடியா தரப்பில், "சிபிஐ அதிகாரிகள் தினமும் என்னிடம் 9 முதல் 10 மணி நேரம் விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே கேட்ட கேள்விகளையே மீண்டும் கேட்கின்றனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. என்னை சிபிஐ காவலில் வைத்து விசாரிப்பதால் எந்த பயனும் இல்லை. எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதாடப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதி, "ஏற்கனவே கேட்ட கேள்விகளை மீண்டும் சிசோடியாவிடம் கேட்கக் கூடாது. அவரை வரும் 6ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தருகிறேன். சிசோடியா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடுகிறேன். ஜாமீன் மனு வரும் 10ம் தேதி விசாரிக்கப்படும்" என உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை விசாரணைக்காக மீண்டும் சிபிஐ அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு மதுபானக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கொள்கையின் அடிப்படையில், 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே, புதிய மதுபானக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. எனினும் விசாரணையில் தீவிரம் காட்டிய சிபிஐ, மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான சிசோடியா கைது செய்யப்பட்டார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடி தங்களை பழிவாங்குவதாக குற்றம்சாட்டினார். பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது சற்று அத்துமீறி செயல்பட்டார் என்றும், மோடியும் தற்போது அதே போல் செயல்படுவதாகவும், இயற்கை அதற்கு உரிய பதிலை அளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: அதானி நிறுவனத்திடம் ரூ.8,000 கோடிக்கு மின்சாரம் வாங்கிய குஜராத் அரசு

ABOUT THE AUTHOR

...view details