ஹைதராபாத்:தெலங்கானா மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய மருத்துவமனைகளை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தெலுங்கானா மருத்துவ அறிவியல் கழகம் (TIMS - Telangana Institute of Medical Sciences) என்ற பெயரில் மூன்று மருத்துவமனைகள் கட்டப்படவுள்ளன. ஹைதராபாத்தின் சனாத்நகர், அல்வால் மற்றும் எல்பி நகரில் இந்த டிம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படவுள்ளன. இதற்காக 25 லட்சம் சதுர அடி நிலத்தை தெலங்கானா அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துமவனைகள் கட்டப்படவுள்ளன.
இந்த மருத்துவமனையை மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் கட்ட தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு இணையான தரமான மருத்துவம் இந்த புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என்றும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. மூன்று டிம்ஸ் மருத்துவமனைகளும் தலா ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
இந்த மூன்று டிம்ஸ் மருத்துமனைகள் மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள நிம்ஸ் மருத்துவமனையும் மேம்படுத்தப்படவுள்ளது. நிம்ஸ் மருத்துவமனை 22 ஏக்கரில் 1,300 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இது, 1,570 கோடி செலவில் 2,100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய மருத்துவமனைகளில் இதய நோய், நுரையீரல், சிறுநீரகம், மூளை, கல்லீரல் உள்ளிட்ட 34 வகையான சிறப்பு மருத்துவப் பிரிவுகள் நிறுவப்படவுள்ளன.