டெல்லி:டெல்லி ரயில் பவனில் கடந்த 1ஆம் தேதி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும், அந்த ரயில் முதன்முதலாக புகழ்பெற்ற கால்கா-ஷிம்லா மலைரயில் பாதையில் இயக்கப்படும் எனவும், பின்னர் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ஹைட்ரஜன் ரயில்கள், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுவதில்லை என்றும், டீசல் ரயில்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஹைட்ரஜன் ரயில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும் தெரிவித்தார். மற்ற ரயிலுடன் ஒப்பிடும்போது ஹைட்ரஜன் ரயில் சிறியதாக இருக்கும் என்றும், அதில் ஆறு முதல் எட்டு பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
'இந்தியாவில் தற்போது சுமார் 37 சதவீத ரயில்கள் டீசல் இன்ஜின்களுடன் இயங்குகின்றன. நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் 12 சதவீதம், வாகன போக்குவரத்துகளால் வெளியிடப்படுகின்றன. அதில், ரயில் போக்குவரத்து 4 சதவீத பசுமை இல்ல வாயுக்களை மட்டுமே வெளியிடுகிது. 2030-க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள ரயில்வே துறைக்கு, இந்த ஹைட்ரஜன் ரயில்கள் பெரும் உதவியாக இருக்கும்' என்றும் தெரிவித்தார்.
கால்கா - ஷிம்லா மலை ரயில்பாதை 120 ஆண்டுகள் பழமையானது. இது கடந்த 1903ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. 96 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதை, 103 சுரங்கங்கள் வழியாக செல்கிறது. இந்த மலை ரயில் பாதை, யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜோஷிமத் போலவே காஷ்மீரில் நிலவெடிப்பு.. மக்கள் பீதி..