டெல்லி: இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் சென்ற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று(ஜூலை 21) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பின் ராம்நாத் கோவிந்திற்குப் பிறகு நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்கப் போவது யார் என்பதை அறியலாம்.
ஆளும் மத்திய அரசான பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதன்பின்னர் ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார். அனைத்து மாநிலங்களின் வாக்குப் பெட்டிகளும் நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அறை எண் 63-ல் வாக்கு எண்ணும் பணிக்கு தேர்தல் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடத்தும் தலைமை தேர்தல் அதிகாரியான ராஜ்யசபா பொதுச்செயலாளர் பி.சி. மோடி, வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடுவார். இதன் முடிவுகள் மாலைக்குள் அறிவிக்கப்படும். எம்.பி.க்களின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, அகர வரிசைப்படி 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு முடிவு வெளியாகும்.