தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி! கரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கே அனுமதி! - கரோனா கட்டுப்பாடுகள்

சென்னை: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நடைபெறும் 48 நாட்கள் விழாவில் கரோனா பாதிப்பு இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

temple
temple

By

Published : Dec 26, 2020, 6:58 PM IST

கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், சனிப்பெயர்ச்சியை ஒட்டி டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை, திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி, கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்கத் தலைவரான நாதன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வரன் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில்,

  • சனிப்பெயர்ச்சி நாளான 27ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு. அங்குள்ள தீர்த்தங்களில் நீராட தடை.
  • சனிப்பெயர்ச்சி நாளை தவிர்த்து மீதமுள்ள 48 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
  • அன்னதானம் கோவிலுக்கு வெளியில் வழங்கப்படும்.
  • தனி மனித விலகலை பின்பற்றும் வகையில், பக்தர்களின் வசதிக்காக மூன்று கி.மீ. நீளத்திற்கு வரிசை.
  • நுழைவாயிலில் கிருமி நாசினி பயன்படுத்துவது மற்றும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
  • பக்தர்களை கண்காணிக்க 140 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்.
  • அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், பக்தர்களின் மத உணர்வு, வழிபடும் உரிமை பாதிக்கும்.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 48 நாட்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதி சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும், சனிப்பெயர்ச்சி விழா நடத்துவது தொடர்பாக, புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை ஆளுநர், மனுதாரர் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனை சான்றிதழை பக்தர்கள் சமர்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து காரைக்காலை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு இன்று அவசர வழக்காக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை எனவும், உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற முடிவு பண விரயம் மற்றும் சாத்தியமற்றது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், வெப்ப நிலை அதிகமாக இருப்போருக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்து, அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்ற மார்கழி பௌர்ணமி பூஜை ரத்து

ABOUT THE AUTHOR

...view details