டெல்லி:அண்மையில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, இந்திய ஜனநாயகம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி வெளிநாட்டில் பேசியது தவறு என்றும், அவர் ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதித்ததாகவும் குற்றம் சாட்டினர். இதற்காக ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கடந்த வாரம் அதானி குழும பங்குச்சந்தை மோசடி குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் லண்டனில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசிய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்புக்கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
லண்டனில் பேசியது குறித்து தான் விளக்கமளிக்க விரும்புவதாகவும், ஆனால் விளக்கமளிக்க மக்களவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். ஆனால், ராகுல்காந்தி பேசியதில் எந்தவித தவறும் இல்லை என்றும், அவர் மன்னிப்புக் கேட்க மாட்டார் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பாரத் ஜடோ யாத்திரையின்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சில பெண்களை சந்தித்ததாகவும், அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என வருந்தியதாகவும் ராகுல்காந்தி யாத்திரையைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு செல்ல அஞ்சுகிறார்கள் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக ராகுல்காந்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி போலீசார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.