புதுச்சேரிகூட்டுறவு நகர வங்கியின் லாஸ்பேட்டை கிளை, பாக்குமுடையான்பேட்டை பிரதான சாலையில் உள்ளது. கூட்டுறவு வங்கியில் வட்டி குறைவு என்பதால், லாஸ்பேட்டை மட்டுமின்றி புதுவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் நகைகளை அடகுவைத்துள்ளனர்.
கூட்டுறவு நகர வங்கி லாஸ்பேட்டை கிளையில் வைக்கப்பட்டுள்ள நகைகள் மாற்றப்பட்டு கவரிங் நகைகள் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கியின் பரிசோதனை பிரிவு மேலாளர் அன்பழகன் உத்தரவின்படி, லாஸ்பேட்டை கிளை வங்கியில் அடைமானம் வைக்கப்பட்ட நகைகள் மறு ஆய்வுசெய்யும் பணி நடந்தது.
கடந்த 18ஆம் தேதி வங்கியின் லாக்கர் சாவி மேலாளர், காசாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கண்காணிப்பில் இந்தப் பணி நடந்தது. இதில் 28 வாடிக்கையாளர்களின் 80 பைகளில் வைக்கப்பட்டிருந்த, சுமார் 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று கிலோ 289 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டு, போலியாக கவரிங் நகைகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.