ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள தனி நபரின் தகவல்களை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால் அதனை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் , மறைக்கப்பட்ட ஆதார் அதாவது மொத்தமுள்ள 12 எண்களில் முதல் 8 எண்களை மறைத்து விட்டு இறுதி 4 எண்களை மட்டும் உபயோகப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மறைக்கப்பட்ட ஆதாரை பெற அதிகாரப்பூர்வ இணையத்தில் DO U WANT MASKED OPTIONஐ பயன்படுத்தி கொள்ளவும் யுஐடிஏஐ சுற்றறிக்கை வெளியிட்டது. இது குறித்து அகில இந்திய இளையோர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பதிவில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு பயன்களை பெற தங்களது ஆதார் அட்டையை உபயோகப்படுத்திய நிலையில் தற்போது இப்படியொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, ஆபத்தை மத்திய அரசு தற்போதுதான் உணர்ந்திருப்பதை காட்டுவதாகவும், ஆனால் இது மிக தாமதமானது எனவும் தெரிவித்திருந்தார். இதே போல் பலரும் கண்டனம் தெரிவிக்க சர்ச்சை பெரிதானது.