சென்னை: தேஜ் புயலானது அதிதீவிர புயலாக மாறி ஒடிசா பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து வங்கக்கடலில் ஹமூன் எனும் மற்றொரு புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மிகவும் அரிதான சூழலில் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய இம்மாதிரியான புயல் நிகழ்வு இதற்கு முன்னர் 2018 யில் நிகழ்ந்துள்ளது. தேஜ் புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ள நிலையில், வரும் 26ஆம் தேதி ஏமன் ஓமன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள தேஜ் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் மேலும் ஒரு புயல் உருவாகியுள்ளது. தேஜ் புயல் அரபிக் கடல் பகுதியில் கடும் புயலாக மாறும் அதே நேரத்தில் புதிதாக உருவாகி உள்ள “ஹமூன்” புயலால வடகிழக்கு மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்! பூத்து குலுங்கும் மலர்களை காண ஆசை!
இந்த புயலால் வங்கக் கடலின் மேற்கு பகுதியின் மத்தியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 17 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹமூன் புயலானது அக்டோபர் 23 ஆம் தேதி காலை வரை கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 25 ஆம் தேதி மாலையில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே பங்களாதேஷ் கடற்கரையில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் இந்த புயல் மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. புயல் காரணமாக அக்டோபர் 26 ஆம் தேதி வரை வடகிழக்கு மாநிலங்களிலான அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்; வேறு மாநிலங்களில் வேண்டுமானால் இருக்கட்டும்: ப.சிதம்பரம் கருத்து!