டெல்லி:ஜி20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வான டெல்லி ஜி20 பிரகடனத்தை, அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டு உள்ளதாகவும், இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி ஜி20 பிரகடனத்தை, ஜி20 உச்சி மாநாடு ஏற்றுக் கொண்டு உள்ளதாகவும், இந்த கூட்டுப் பிரகடனம் உருவாக்க உதவிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டப அரங்கில் இன்று (செப். 9) துவங்கிய ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக, நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்த இந்த பிரகடனத்திற்கு, தற்போது ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி ஜி20 பிரகடனம், வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உள்ளடக்கியதாக உள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
இந்த ஜி20 மாநாடு, இந்தியாவை, உலகத்தை தயார்நிலையிலும் மற்றும் உலகத்தை, இந்தியாவிற்காக தயார்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மையமாகக் கொண்டு தொழில்நுட்பத்தின் மாற்றம் மற்றும் உள்ளடக்கிய பங்கை, இந்த ஜி20 மாநாடு விளக்கும் வகையில் உள்ளதாக, அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி ஜி20 பிரகடனம், அந்த அமைப்பில் இடம்பெற்று உள்ள ஒவ்வொரு உறுப்பு நாடுகளுக்கும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் உள்ளதாக, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் விஷயங்களிலும், அனைத்து உறுப்பு நாடுகளிடையே 100 சதவீத அளவிலான ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது. இன்றைய உலகில் மக்கள், அமைதி மற்றும் செழிப்புக்கான ஒரு சக்திவாய்ந்த அழைப்பு ஆக, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு திகழ்வதாக, அமிதாப் காந்த் X தள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்துதல், நிலையான எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம், 21ஆம் நூற்றாண்டிற்கான பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் பன்முகத்தன்மையை புதுப்பிக்கும் வகையில், இந்த டெல்லி ஜி20 பிரகடனம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஜி20 நாடுகளின் மாநாட்டின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல் என்று அமிதாப் காந்த் குறிப்பிட்டு உள்ளார்.
சர்வதேச அளவிலான நம்பிக்கையின்மை நிலையை அகற்ற மனிதநேயத்துடனான அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி, தனது துவக்க உரை பேச்சில், சர்வதேச நாடுகளை வலியுறுத்தி இருந்தார். ஆப்பிரிக்க யூனியனுக்கு, ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாட்டிற்கான உரிமையை, வழங்குவதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "நம்பிக்கையின்மையை அகற்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்போம்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்னுரை!