புதுடெல்லி:கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம், பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக, அமெரிக்காவின் ஹிண்டன் பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. இதையடுத்து பங்குச்சந்தையில், அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
இதற்கிடையே, ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தாக்குதல் இல்லை என்றும், இந்தியாவின் மீதான தாக்குதல் எனவும் கண்டனம் தெரிவித்தது. இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ள நிலையில், கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அதானி குழுமத்துக்கு எதிராகவும், பங்குச்சந்தையில் அந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக எழுந்தப் புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும், வரும் 17-ம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது.