டெல்லி: ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த படுதோல்வி, சமீப காலங்களில் சரிந்துவரும் அக்கட்சியின் செல்வாக்கு ஆகியவற்றைக் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் காரியக் கமிட்டி குழு இன்று (மார்ச் 13) கூடியது.
டெல்லி அக்பர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராகுல் தலைவர் - கெலாட் விருப்பம்
தலைமை நோக்கி அதிருப்தி தெரிவித்த ஜி-23 தலைவர்களில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். முன்னதாக, கூட்டம் நடைபெறும் அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த தொண்டர்கள், மீண்டும் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என முழக்கம் எழுப்பி வந்தனர்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மீண்டும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்தார். அதில் அவர் பேசியதாவது, "ராகுல் காந்தியை கண்டிப்பாக கட்சித் தலைவராக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில், சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ இல்லை.
மேலும், காங்கிரஸ் ஒற்றுமைக்கு சோனியா காந்தி குடும்பத்தினர் முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சன்னி முதலமைச்சரான பிறகு சூழல் சீரானாலும், உட்கட்சி மோதலால் பஞ்சாபில் நாம் தோல்வியடைந்துள்ளோம்" என்றார்.
2024 வரை சோனியா தான்
கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் சோனியா காந்தி, இந்தக் குழு விரும்பினால் ராகுல், பிரியங்கா ஆகியோர் தங்களது கட்சிப்பொறுப்பை ராஜினாமா செய்ய தயார் எனக் கூறியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தானும் கூட தலைவர் பதவியைத் துறக்கத் தயார் எனவும் சோனியா கூறியதாக தெரிகிறது.
இதை அனைத்தையும் மறுத்த காங்கிரஸ் காரிய கமிட்டிக் குழு, சோனியாவின் தலைமையின் மீதான நம்பிக்கை தற்போதும் வலுவாக உள்ளது என்றும்; வரும் 2024 மக்களவைத் தேர்தல் வரை அவர் வழிகாட்டுதலில் கட்சி செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தலைமையின் மீது நம்பிக்கை
இதையடுத்து, கூட்டம் நிறைவுபெற்ற பின்னர், கே.சி. வேணுகோபால் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமை மீதான நம்பிக்கையை காரிய கமிட்டி குழு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மேலும், கட்சியை மறு சீராக்கவும், வலுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் வருங்காலத்தில் விரைவாக எடுக்கப்பட உள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின், கட்சியின் சார்ந்த வியூகம் அமைக்கும் 'சிந்தன் ஷிவ்விர்' நிகழ்ச்சி நடைபெறும்" என்றார்.
மல்லிகார்ஜூன கார்கே," காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா எங்களை வழிநடத்தி, எதிர்காலத் திட்டங்களை நோக்கி பயணிக்க உள்ளோம். அவர்களின் தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" எனக் கூறினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து...
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்விடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, "சோனியா காந்தி தலைவராக தொடர்வார். முடிவடைந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கட்சியை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கை குறித்தும், எதிர்வரும் தேர்தல்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில், பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்த காங்கிரஸ், மற்ற மாநிலங்களில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் பெறவில்லை. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் போட்டியிட்ட 400 தொகுதிகளில் 370-க்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் இழந்து படுதோல்வியைக் கண்டது.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்திட்டம் குறித்தும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கைகோர்த்து, மக்கள் பிரச்னையை அவையில் எழுப்பவது குறித்தும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ஆலோசித்தனர். இது, சோனியா காந்தியின் வீட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடலை மீட்க வேண்டும் - பிரதமர் மோடி