ஹல்த்வானி (உத்தரகாண்ட்) : உத்தரகாண்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு (2022) நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் வெற்றி சங்கொலி யாத்திரையை நடத்துகிறது.
வெள்ளிக்கிழமை (நவ.12) நடைபெற்ற வெற்றி சங்கொலி யாத்திரையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் கலந்துகொண்டார்.
அப்போது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக நேர்காணல் அளித்த ஹரிஷ் ராவத், “உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் வெற்றி சங்கொலி யாத்திரையை தொடங்கியுள்ளது. மக்களின் ஆதரவுடன் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
பாஜக ஆட்சியில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கும்” என்றார். பின்னர், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி குறித்து கூறுகையில், “ஆளுநரும், முதலமைச்சரும் மக்களை மீட்பதாக கூறுகின்றனர். ஆனால் எந்த வேலையும் நடைபெறவில்லை. ஊழல் அற்ற சிறந்த அரசாங்கத்தை கொடுப்பதாக முதலமைச்சர் கூறினார். ஆனால் சுரங்கத்தில் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன” என்று குற்றஞ்சாட்டினார்.
2022 சட்டப்பேரவை தேர்தல் குறித்து ராவத், “2022 உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெல்லும். “கிராமம் கிராமம் தோறும் காங்கிரஸ்” என்ற பரப்புரை இரண்டாம் கட்ட நிலையை எட்டியுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் இரவு முழுவதும் கிராமங்களில் தங்கி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி மட்டும் எங்கள் இலக்கு அல்ல, நாங்கள் ஆட்சியை கைப்பற்ற தயாராகி வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க : உத்தரகாண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்