டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் பட்டியலின சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்ற ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் அனில் சௌத்ரி, “இதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும், தங்கள் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
15 ஆயிரம் பாலியல் வன்புணர்வு
தேசிய தலைநகரில் கடந்த 10 ஆண்டுகளில் (2014-2020) 15 ஆயிரம் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. ராகுல் காந்தி அங்கு செல்ல வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்ட பெண் தலித் என்பதால், இந்த வழக்கை எடுத்து விசாரணை நடத்த காவல் நிலையமும் தயார் நிலையில் இல்லை” எனக் கூறினார்.
மேலும், “இதுபோன்ற அறிக்கைகள் அப்பெண்ணை அவமதிப்பது மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்றார். ராகுல் காந்தியை தொடர்ந்து மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமையின் மையப்புள்ளி
மேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் அனில் சௌத்ரி தாக்குதல் தொடுத்தார். அவர், “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சந்தர்பவாதி. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு ஏன் முன்னரே அவர் செல்லவில்லை.
சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் சென்ற பிறகு, அங்கு செல்கிறேன் என ட்வீட் செய்கிறார். டெல்லி விஸ்தாரமான நகரமா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் பாலியல் வன்புணர்வின் மையப்புள்ளியாக திகழ்கிறது. பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள் பாதுகாப்பாக டெல்லியை கருதுகின்றனர். இதெற்கெல்லாம் யார் பொறுப்பு?” என்றார்.
நீதிக்காக நாடே போராடும்
இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எழுப்பியது. அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி சக்திஷின் கோகில், “மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய பேசும் முதலமைச்சரோ அல்லது பிரதமரோ இதற்கு பொறுப்பேற்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் பார்த்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அப்போது தங்களின் மகளுக்கு நீதி கிடைக்க நாடே போராடும் என்று உறுதியளித்துள்ளார்” என்றார்.
பட்டியலின சிறுமி வன்புணர்வு
டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் ஆக.1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சிறுமியை யாருக்கும் தெரியாமல் ஓல்டு நங்கல் பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரிக்க முயன்றனர்.
அப்போது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. சம்பவத்தன்று சிறுமி சுடுகாட்டில் உள்ள கூலிங் இயந்திரத்தில் குளிர்ந்த நீர் பிடிக்க சென்றுள்ளார்.
திடுக்கிடும் தகவல்
இந்நிலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது சிறுமி மின்சாரம் பாய்ந்து மரணித்துவிட்டார் என்று கூறியுள்ளனர். மேலும், இது வெளியே தெரிந்தால் சிறுமியின் உடல் பாகங்களை திருடி விடுவார்கள் என்று பயமுறுத்தி உடலை அங்கேயே தகனம் செய்ய முயற்சித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மதச் சடங்கு செய்பவர் உள்பட மூவர் மீது காவலர்கள் கொலை, பாலியல் வன்புணர்வு, போக்சோ சட்டம் மற்றும் பட்டியலின- பழங்குடியின சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : டெல்லி சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்