ஹைதராபாத்: கரோனா இரண்டாம் அலையின் போது நாட்டில் ஒருவர் கூட ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறக்கவில்லை என ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சர் மருத்துவர் பாரதி பிரவீன் பவார் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இந்தப் பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் பதிலுக்கு எதிராக உரிமை மீறல் புகார் அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், “கரோனா இரண்டாம் அலையின்போது நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியது.
இந்தப் பற்றாக்குறை காரணமாக உரிய சிகிச்சையை பெற முடியாமல் கரோனா பாதிப்பாளர்கள் சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் இறந்தனர். தலைநகர் டெல்லியிலும் ஏராளமானோர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்ததை பார்த்தோம்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக அமைச்சர் இவ்வாறு எழுத்துப்பூர்வ பதிலை பதிவு செய்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த கே.சி. வேணுகோபால், “அமைச்சரின் பதில் கண்டிக்கத்தக்கது. அவர் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயல்கிறார். இது தொடர்பாக அடுத்த நடவடிக்கைக்கு தயாராக உள்ளோம்” என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி இந்தியில் பதிவேற்றிய ட்வீட்டில், “நாட்டில் ஆக்ஸிஜன் மட்டுமல்ல, உண்மைக்கும் உணர்திறனுக்கும் கடும் பற்றாக்குறை நிலவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : '2ஆம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' - ஒன்றிய அமைச்சர்