டெல்லி :2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்த நாடே எதிர்நோக்கி காத்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறுமா அல்லது காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா ஆட்சியை கைப்பற்றுமா என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்து எதிர்வாரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதேநேரம் தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய பேச்சுவார்த்தைகள் இந்தியா கூட்டணி இடையே கடும் இழுபறியை ஏற்படுத்தி வருகிறது.
நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகள் ஆலோசனை நடத்தின.