புதுடெல்லி: உச்சநீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, அந்த உத்தரவை நிறைவேற்ற டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை வரும் பிப்ரவரி 28ஆம் தேதி விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய 3 பேர் அமர்வு விசாரித்தது.
கேரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்விடம், டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை 11 மணியளவில் பவன் கேரா வெளியேறிய போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
கேரா மீது லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்சில் புகார் அளிக்கப்பட்டு எஃப்ஐஆராக மாற்றப்பட்டது. வாரணாசியில் மற்றொரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது, அசாமில் கேரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, டில்லி போலீசார் விமானத்தில் இருந்து கேராவை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.