தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஸ்கர் முதலமைச்சர் பிறந்த நாளில் அமலாக்கத்துறை சோதனை.. பிறந்த நாள் பரிசு என காங்கிரஸ் குற்றச்சாட்டு! - அரசியல் ஸ்த்திரத்தன்மை

Congress Accused BJP: சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் தோற்று விடுவோம் என்பதை அறிந்து பாரதிய ஜனதா கட்சி, மத்திய அமைப்புகளை வைத்து மிரட்டி வருவதாக, அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சந்தன் யாதவ் தெரிவித்து உள்ளார்.

தோல்வி பயத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - பா.ஜ. கட்சி மீது சரமாரியாக குற்றம் சாட்டும் காங்கிரஸ்!
தோல்வி பயத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - பா.ஜ. கட்சி மீது சரமாரியாக குற்றம் சாட்டும் காங்கிரஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 1:41 PM IST

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சட்டப் பேரவை தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்பதை முன்கூட்டியே அறிந்ததால், முதலமைச்சர் பூபேஷ் பாகலின் பிறந்த நாளில், அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளதாக, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

ஈடிவி பாரத் ஊடகத்திற்கு, இதுதொடர்பாக பேட்டி அளித்து உள்ள சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சந்தன் யாதவ் கூறியதாவது, "சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி, மாநில மக்களின் நற்மதிப்பை பெற்று உள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கூட, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி, அந்த பகுதி மக்களின் வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து உள்ளது. பூபேஷ் பாகல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களால், அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்து உள்ளனர்.

மாநில அரசின் சுகாதாரத் துறையின் மருத்துவ வாகனங்கள், ஊரகப் பகுதிகளுக்கும் சென்று, அங்கு உள்ள மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றி உள்ளன. கோ தான் திட்டத்தின் மூலம் மாட்டுச் சாணங்களை கொள்முதல் செய்யும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளதால், கிராமப் பகுதி மக்கள், பொருளாதாரத்திலும் தன்னிறைவு அடையும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நல்ல, தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில், அரசியல் ஸ்த்திரத்தன்மை அற்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கைகளில், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பண பலம் மற்றும் அதிகாரப் பலத்தின் துணை கொண்டு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை அரங்கேற்றிய நிலையில், அங்கு, பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்தது. மகாராஷ்டிரா மாநிலத்திலும், இதே நிலையை பின்பற்றி, அங்கு தற்போது ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அங்கு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை குறிவைத்து, பா.ஜ.கட்சியின் நடவடிக்கைகள் உள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது. இதன்காரணமாக, முதலமைச்சர் பூபேஷ் பாகலின் அரசு மீது மக்களுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசின் நலத் திட்டங்களுக்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து உள்ளனர்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாததால், முதலமைச்சர் பூபேஷ் பாகலின் பிறந்த நாள் என்றும் பாராமல், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனையை நடத்தி, அரசியல் பழிவாங்கும் போக்கை, பாரதிய ஜனதா கட்சி கடைப்பிடித்து வருவதாக" சந்தன் யாதவ் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: பிரக்யான் ரோவர் என்ன செய்கிறது...? இஸ்ரோ கொடுத்த அதிரடி அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details