தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி இன்று (நவம்பர் 4) மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவினர், மஹாராஷ்டிராவில் சிவ சேனாவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை ‘இத்தாலிய மாஃபியா’ என விமர்சித்தனர். இதை காங்கிரஸ் பேச்சாளர் சுப்ரியா ஸ்ரீநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜகவின் அர்னாப் பாசம் - கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் பேச்சாளர் - அர்னாப் கோஸ்வாமி
தனியார் செய்தி நிறுவனத்தின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், காங்கிரஸ் பேச்சாளர் சுப்ரியா ஸ்ரீநாத் இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர், அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக உடனே களத்தில் குதிக்கும் பாஜகவினர், மிர்சாபூரில் குழந்தைகளுக்கு உப்பும் சப்பாத்தியும் வழங்கப்படுவதை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டபோது எங்கே சென்றார்கள்? குறிப்பிட்ட நபர்களை கைது செய்யும்போது மட்டும் பாஜக கொதித்தெழுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.