அமெரிக்காவின் 44ஆவது அதிபராக 2008ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை இருந்தவர் பராக் ஒபாமா. இவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நினைவுகளைத் தொகுத்து 'எ பிராமிஸ்டு லேண்ட்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
வரும் 17ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள இப்புத்தகத்தில் இருக்கும் சில பகுதிகளில் ஊடகங்களில் முன்கூட்டியே வெளியானது. அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் கருத்து இணையத்தில் வைரலானது.
தனது `எ பிராமிஸ்டு லேண்ட்’ புத்தகத்தில் ஒபாமா, ராகுல் காந்தி குறித்து குறிப்பிடுகையில், "பதற்றத்தோடு இருப்பவர்; நன்றாகப் படித்து ஆசிரியரைக் கவர வேண்டும் என நினைக்கும் மாணவர்போல் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் ஆழ்ந்த அறிவைப் பெற விருப்பமோ, தகுதியோ பெறாமல் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் இந்தக் கருத்திற்கு அதிகாரப்பூர்வமாக பதிலளிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் ஒபாமாவுக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் உதித் ராஜ் கூறுகையில், "வெறும் ஐந்து முதல் 10 நிமிட சந்திப்புகளில் ஒருவரது ஆளுமையை யாராலும் அறிய முடியாது. இதை அறிய சில சமயம் பல ஆண்டுகள்கூட ஆகும். ராகுல் காந்தியின் ஆளுமையை நீங்கள் தவறாக கணித்துள்ளீர்கள். சிறிது காலம் காத்திருந்து, அவரது ஆளுமையைப் பாருங்கள்" என்று கூறியுள்ளார்.
காங்கிரசின் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன், "ஒபாமாவின் இந்தக் கருத்து ராகுல் காந்தியை கடவுளாகக் கருதும் கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: உலகின் முதல் தடுப்பூசி மருந்தாக செயல்பாட்டுக்கு வருகிறதா ’கோவிஷீல்ட்’?