டெல்லி :230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் பாஜக 163 இடங்களை கைபற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
மத்திய பிரதேச முதலமைச்சராக பாஜக தலைவர் மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் 114 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
அதன் அடுத்த ஐந்து வருடங்களில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடும் சரிவை சந்தித்து உள்ளது. இந்நிலையில், தேர்தல் தோல்வியை அடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை, கட்சி மேலிடம் நீக்கி உள்ளது. மேலும் அவருக்கு பதிலாக ஜித்து பட்வாரி மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.