காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன்.22) செய்தியாளர்களை சந்தித்து கரோனா குறித்த வெள்ளை அறிக்கை (அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்சனை குறித்து எடுத்த தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு) வெளியிட்டார்.
’கரோனா அலைகள் தொடரும்’
அப்போது பேசிய அவர், "கரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை கையாண்ட விதம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணங்களை நாங்கள் சுட்டிக்காட்ட முயற்சித்துள்ளோம். கரோனா மூன்றாவது அலைக்குப் பிறகும் தொடர்ந்து நான்கு, ஐந்தாவது அலை எனத் தொடரலாம்.
வெள்ளை அறிக்கையின் நோக்கம்
இந்த வெள்ளை ஆய்வறிக்கையின் நோக்கம் அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது அல்ல, மாறாக மூன்றாவது அலை நோய்த்தொற்றுக்கு நாட்டைத் தயார் செய்ய உதவும் வகையிலேயே வெளியிடப்படுகிறது. மூன்றாவது அலை ஏற்படும் என முழு நாட்டிற்கும் தெரியும். முன்கூட்டியே தயார் நிலையில் இருந்தால் நாம் எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.
’பிரதமரின் அலட்சியப்போக்கு’
"பிரதமரின் கண்ணீரால் மக்களின் கண்ணீரைத் துடைக்க முடியாது. அவரது கண்ணீர் மக்களைக் காப்பாற்ற முடியாது. ஆக்ஸிஜனால் முடியும். ஆனால் பிரதமர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் நடந்ததால் அவரது கவனம் வேறு இடத்தில் இருந்தது" என்றும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இதையும் படிங்க:முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்