டெல்லி: சமீபத்தில் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸ் தெலங்கானா, மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (அக்.15) வெளியிட்டு உள்ளது.
அதன்படி, நவம்பர் 30 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானாவுக்கு 51 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. இதில், தெலங்கானா பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அனுமலா ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியில் இருந்தும், தெலங்கானா சட்டப்பேரவையின் காங்கிரஸ் தலைவர் மல்லு பட்டி விக்ரமார்கா மதிரா தனித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதேபோல், டாக்டர் கோடா நீலிமா சனத் நகரில் இருந்தும், ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கொல்லபூரில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
அதேநேரம், நவம்பர் 17 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. இதன் அடிப்படையில், மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான கமல் நாத் சிந்த்வாரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.