ஹைதராபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடந்தது. மொத்தமாக 89 தொகுதிகளில் 63.3 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதில் 58.4 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன. குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கலாம் என்று கணிப்புகள் வெளியாகின. குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 149 தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 35 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிப்புகள் வெளியாகின.
இருப்பினும், காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை போல் முடிவுகள் மோசமாக இருக்காது என்ற நம்பிக்கையில் உள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் குமார் கூறுகையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அவ்வளவு மோசமாக இல்லை. தேர்தல் கருத்துக் கணிப்புகள் தவறாக போகலாம். நாட்டின் பல மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் கருத்துகணிப்புகளுக்கு எதிராக இருந்துள்ளன. குஜராத்தில் பல மாதங்களாகவே காங்கிரஸ் மிகச் சிறப்பான பரப்புரையை செய்துவந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதையும், பாஜகவின் ஆட்சி என்ன செய்தது என்பதையும் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று விளக்கினோம். பாஜகவின் சாதனைகள் பரப்புரையில் எப்போதும் கிடையாது, பிரதமர் மோடி உள்பட மூத்த தலைவர்களின் ஊர்வலத்திலேயே உள்ளது.
இந்த தேர்தல் கருத்துக் கணிப்புகள் உண்மை கிடையாது. டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். குஜராத்தில் 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே கணிக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதனடிப்படையில் குஜராத் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்திக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நம்பிக்கை அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.