தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்... விலகிய கெலாட்...  சசி தரூர், திக் விஜய் சிங் வேட்புமனு தாக்கல்... - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர் மற்றும் திக் விஜய் சிங், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

Congress
Congress

By

Published : Sep 29, 2022, 4:53 PM IST

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் எம்பி சசி தரூர் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டது. அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக அதிக வாய்ப்புள்ளது என கூறப்பட்ட நிலையில், தலைவரானாலும் ராஜஸ்தான் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கெலாட் விரும்பியதாக தெரிகிறது.

இதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்வானால், சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதலமைச்சராக ஆக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இந்த முடிவுக்கு ராஜஸ்தானில் உள்ள கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நிலவி வந்தது.

இந்த நிலையில், இன்று(செப்.29) காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அசோக் கெலாட் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்காக சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரியதாகவும், இந்த சூழலில் தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். தான் ராஜஸ்தான் முதலமைச்சராக தொடர்வேனா? என்பது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை மனுதாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் திக் விஜய் சிங்கும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் வேட்புமனுவை பெற்றுக் கொண்டதாகவும், நாளை தாக்கல் செய்ய உள்ளதாகவும் திக் விஜய் சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் - காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியுடன் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details