டெல்லி:2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதையடுத்து, தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். அதன் பிறகு, வலிமையான தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. பலரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை மீட்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டனர். ராகுல்காந்தி நாடு முழுவதும் பாரத் ஜடோ யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டு, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பலரும் மீண்டும் கட்சியில் இணையத் தொடங்கினர். அதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினரிடையே இருந்த உட்கட்சிப் பூசலை காங்கிரஸ் தலைமை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. அதன் விளைவாக கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 'இந்தியா' என்ற கூட்டணியை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. இக்கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளன. இக்கூட்டணி மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.