ஹைதராபாத்: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி பாரத் ஜோடா யாத்ரா என்னும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று தொடங்கிய இந்த ஒற்றுமைப் பயணம், நடப்பு ஆண்டின் ஜனவரி 30 அன்று ஸ்ரீநகரில் முடிவடைந்தது.
இந்த பயணத்தில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டரில் 130 நாட்களில் கடந்து உள்ளார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த இந்திய ஒற்றுமைப் பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாரத் ஜோடா யாத்ராவை நடத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது தொடர்பான நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, காங்கிரஸ் தொடங்கிய இந்த யாத்திரையின் முதல் பகுதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்து முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில், தனது புதிய நடைபயணத்தை குஜராத் முதல் மேகாலயா வரை தொடங்க உள்ளதாக மகராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.