சத்தீஸ்கா்: ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு இன்று முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் தோ்தல் வெற்றிக்கான தெளிவான வியூகங்களை வகுக்க இந்தக் கூட்டம் கூடியுள்ளது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே தலைவாரக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை சென்றார்.
இதைத் தொடர்ந்து அருணாசல பிரதேசம் முதல் குஜராத் வரையில் மீண்டும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளான இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்கின்றனர்.