ஹைதராபாத்:தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தெலங்கானவில் ஆட்சி அமைத்தால் மக்கள் நலனுக்காக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும். இந்திராம்மா திட்டத்தின் கீழ் இளம் பெண்களுக்கு 10 கிராம் தங்கம் பரிசு, அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம், கேஸ் சிலிண்டரின் விலை ரூ.500-க்கு விற்கப்படும் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:
- விவசாயத்திற்கு 24 மணி நேர இலவச மின்சாரம்.
- 18 வயதிற்கு மேல் படிக்கும் மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர்.
- ஆசிரியர் காலிப் பணியிடங்களை மெகா டிஎஸ்சி (DSC) மூலம் 6 மாதங்களுக்குள் நிரப்பி, ஆண்டு வேலை காலண்டர் வெளியிடப்படும்.
- முகாம் அலுவலகத்தில் தினமும் முதலமைச்சரின் 'பிரஜா தர்பார்' நடைபெறும்.
- தெலங்கானா இயக்க தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஆர்வலர்கள் மீதான வழக்குகளை நீக்குதல், 250 சதுர அடி வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்து தரப்படும்.
- ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநர் வங்கிக் கணக்கிலும் ஆண்டுக்கு ரூ.12,000 டெபாசிட் செய்யப்படும்.
- மதுபானக் கடைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
- விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும்.
- பெரிய அளவில் பயிர் செய்பவர்களுக்கு விரிவான காப்பீட்டுத் திட்டம்.
- மாநிலம் முழுவதும் சொத்து மற்றும் வீட்டு வரி பாக்கிகள் மீதான அபராதம் ரத்து செய்யப்படும்.
- ஹைதராபாத்தில் உள்ள கால்வாய்கள் நவீனப்படுத்தப்படும்.
- ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் கீழ் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
- பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50 சதவீத சலுகை.
- நகரப்புறங்களில் நவீன வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளிகள் நிறுவப்படும்.
- காளேஸ்வரம் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து உயர் நீதிமன்றத்தில் வாதிடப்படும்.
- தரணிக்கு பதிலாக 'பூமாதா' என்ற பெயரில் புதிய போர்டல் மாற்றம் செய்யப்படும்.
- ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், புதிய PRC உருவாக்குதல், RTC தொழிலாளர்களுக்கு இரண்டு PRC நிலுவைத் தொகை வழங்கப்படும்.
- உஸ்மானியா மருத்துவமனை நவீனப்படுத்தப்படும்.
- அனைத்து மாவட்டங்களிலும் 'குருகுலம்' விளையாட்டுப் பள்ளி நிறுவப்படும்.
- 50 வயதிற்கு மேல் உள்ள மாற்றுத் திறனாளிகளின் மாத ஓய்வூதியம் ரூபாய் 5,016 ஆக உயர்த்தப்படும் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூபாய் 3,016 ஆக உயர்த்தப்படும்.
- ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு உயர்தர அரிசி வழங்கப்படும்.
- ஆடு வளர்ப்பில் ஈடுபடும் யாதவர்கள் மற்றும் குருமக்களுக்கு 2 லட்சம் உதவித்தொகை.
- சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகை 10 லட்சமாக உயர்த்தி தரப்படும்.
- ஹைதராபாத் பத்திரிகையாளர்களின் வீட்டுப் பிரச்னைக்கு தீர்வு மற்றும் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
- வளைகுடா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்தல் மற்றும் வளைகுடாவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
மெட்ரோ ரயில் கட்டணச் சலுகைகள் முதல் கால்வாய்கள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கான நவீனமயமாக்கல் திட்டங்கள் வரை, நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முன்வைத்துள்ளது.
இதையும் படிங்க:தெலங்கானா தேர்தலை வைத்து ஆந்திராவில் சூதாட்டம்.. முக்கிய தலைவர்களின் வெற்றி, தோல்வி மீது பந்தயம்!