புதுச்சேரி:ராகுல் காந்தி மீது மத்திய அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக கூறி அதனை கண்டிக்கும் வகையில் புதுச்சேரி - கடலூர் சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் இன்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்த போராட்டத்தில், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, “புதுச்சேரி அரசு எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதை தவிர்த்து வரியை குறைக்க வேண்டும். அரசியல் பேசுவேன் என கூறும் தமிழிசை சௌந்தரராஜன் வரியை குறைக்க வலியுறுத்தி இருக்கலாமே? ராஜஸ்தானில் காங்கிரஸ் 500 ரூபாய்க்கு கேஸ் கொடுப்பது போல் புதுச்சேரியில் கொடுக்கலாமே? வரியை குறைக்க தமிழிசை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அரசியல் பேசி இருக்கலாமே? கட்சிக்காக இல்லாவிட்டாலும், மக்களுக்காக அரசியல் பேச வேண்டியது தானே. அரசியலில் போனி ஆகாதவர்கள் தான் குறுக்கு வழியில் ஆளுநர்களாக உள்ளனர்” என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “புதுச்சேரிக்கும் தெலங்கானாவுக்கும் தான் ஆளுநராக தமிழிசை உள்ளார். ஆனால், அவர் தமிழ்நாட்டிற்குச் சென்று ஏன் அரசியல் பேச வேண்டும்? அங்கு பேச வேண்டிய அவசியம் என்ன? அரசியல் பேச வேண்டும் என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யுங்கள். அதன் பிறகு தேர்தலில் நிற்க வேண்டும்” என தமிழிசைக்கு வைத்திலிங்கம் எம்பி சவால் விடுத்தார்.