டெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிச.04) தொடங்கியது. இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மாநிலங்களவையில் தபால் அலுவலக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூடும் அவையில் ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் 2004 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீட்டுச் சட்டம், மாநில அரசு பதவிகளில் நியமனம், தொழில் நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்க வழிவகை செய்கிறது. மேலும், காஷ்மீர் சட்டப்பேரவையில் எண்ணிக்கையை 83-இல் இருந்து 90ஆக அதிகரிக்கிறது. மேலும், இது பட்டியல் சாதியினருக்கு 7 இடங்களையும், பட்டியல் பழங்குடியினருக்கு 9 இடங்களையும் ஒதுக்குகிறது.
இதையும் படிங்க: கடும் எதிப்புகளை மீறி மாநிலங்களவையில் தபால் அலுவலக மசோதா நிறைவேற்றம்!
இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர், மக்களவையில் மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்ட தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். இதுகு றித்து அவர், “கவலைக்குரிய விதமாக கனமழையால் சென்னையை வெள்ளம் சூழந்தது. மாநில அரசும், மாநகராட்சியும் தங்களது பணியைச் செய்துள்ளன.
சென்னையில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அரசும் அமைச்சர்களும் விளக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் குறித்து மக்களவையில் விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் மீது மக்களவையில் இன்று நடைபெறும் விவாதங்களில், அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: படிப்படியாக குறையும் மிக்ஜாங் புயல் தாக்கம்.. சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன?