திருவனந்தபுரம் : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னணி பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் டெலிபோன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரமேஷ் சென்னிதலா
கேரளத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “இந்த விவகாரத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டு உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் முழு பொறுப்பு” என்றார்.
முகம்மது பஷீர்
முஸ்லிம் லீக் எம்பி முகம்மது பஷீர், “இது மிக மிக தீவிரமான விஷயம். இதில் ஒன்றிய அரசின் செயல்பாடு மர்மமாக உள்ளது” என்றார்.
கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், “அதிபெரும்பான்மையுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியாக மாறியுள்ளதுடன், ஊடகவியலாளர்கள், நீதிபதிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை செய்துவருகிறது.
இத்தனை ஆபத்தானதா இஸ்ரேலின் பெகாசஸ்!
அவர்களின் மொபைல் போன்களில் உளவு பார்ப்பதன் மூலமும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துகொள்வதன் மூலமும் ஏதேச்சதிகார போக்கில் செயல்படுகிறது. இது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்கள் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நாடாளுமன்றத்தை மிரட்டும் பெகாசஸ் அரக்கன்!
இந்தப் பிரச்சினை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவால். இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மற்றும் அரசியலமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகள் இருக்கும்போது, தனிநபர்களை உளவு பார்க்க அரசாங்கம் ஏன் ஒரு மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும்? அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் அது நடக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
ப.சிதம்பரம்
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தொடர்ச்சியாக பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தனது முதல் இன்னிங்ஸையை தவறாக தொடங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் கருத்து
கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கலாப்பா ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- இரு அவைகளும் ஒத்திவைப்பு
இஸ்ரேல் நாட்டின் தனியார் நிறுவனத்தின் மென்பொருளான பெகாசஸ் வாயிலாக ஒன்றிய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், முன்னாள் தேர்தல் ஆணையர், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் 300க்கும் மேற்ட்டோர் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தி வயர் ஆங்கில இணையதளம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) செய்தி வெளியிட்டது.
டெலிபோன் ஒட்டுக்கேட்பு- மோடி அரசுக்கு சு.சுவாமி எச்சரிக்கை!
இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 19) 17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
அப்போது, பெகாசஸ் வேவு பார்த்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பியதால் மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
இதையும் படிங்க : பெகாசஸ் விவகாரம்- நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் திட்டம்!