பெங்களூரு : கர்நாடக சட்டப் பேரவை சபாநாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் யு.டி. காதர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டப் பேரவை சபாநாயகராக பதிவியேற்ற முதல் இஸ்லாமியர் என்ற சிறப்பை யு.டி. காதர் பெற்றார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே. 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கடந்த மே. 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அறுதி பெறும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதலமைச்சர் ரேசில் இருவருக்கும் இடையே கடும் போராட்டம் நீடித்த நிலையில், டி.கே. சிவகுமாரை சரிகட்டிய காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்தது.
கடந்த 20ஆம் தேதி பெங்களூரு கண்டீவரா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் இருவரும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க 3 நாட்கள் சட்டசபை கூட்டப்பட்டது. அவசர சட்டசபை கூட்டத்திற்கு ஆர்.வி. தேஷ் பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்பட்டார்.
இந்நிலையில், சட்டப் பேரவை கூட்டத்தின் இறுதி நாளில் சபாநாயகர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் 5 முறை எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான யு.டி காதர் சபாநாயகராக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் முன்மொழிந்தனர்.