பாட்னா (பீகார்):திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நான்கு வருடங்களுக்கு முன்பு பேசிய கருத்து சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. 4 வருடத்திற்கு முன்பு ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எம்.பி தயாநிதி மாறன் மேடையில் பேசுகையில், “ஹிந்தி படித்த உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்கள், பிழைப்பிற்காகத் தமிழ்நாடு வந்து தமிழ் கற்றுக்கொண்டு கட்டடத் தொழிலும், சாலை அமைத்தல் மற்றும் கழிவறை சுத்தம் செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆங்கிலம் படித்தவர்கள் தொழில் நுட்பத்துறையில் கைநிறைய ஊதியம் பெறுகின்றனர்” எனப் பேசி இருந்தார்.
வைரலான வீடியோ:இந்த வீடியோவை சமீபத்தில் பாஜகவினர் பலர் அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்வதுடன் ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் 'இந்திய' கூட்டணிக் கட்சிகளை டேக் செய்து வருகின்றனர். அதனால் கூட்டணிக் கட்சிகள், உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மக்களின் மொழி உணர்வைக் கேலி செய்யும் விதமாகவும், மொழி வெறுப்பை உண்டாக்குவதாகவும் திமுக எம்பி தயாநிதியின் கருத்து அமைகின்றது என்று கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்வியாளரும் பீகார் காங்கிரஸ் அரசியல் விவகாரக்குழு உறுப்பினருமான சந்திரிக்கா பிரசாத் யாதவ், எம்பி தயாநிதி மாறனின் கருத்துக்குக் கண்டனங்களைப் பதிவு செய்ததுடன், தயாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், "ஹிந்தி மொழி மற்றும் உத்திர பிரேதசம், பீகார் மக்களை இழிவுபடுத்திப் பேசிய தயாநிதி மாறன், அவர் பேசிய கருத்துக்கு 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.