காங்கிரஸ் கட்சிக்கு விவசாயப் போராட்டத்தினால் முதல் அரசியல் லாபம் கிடைத்திருக்கிறது என்பதை பஞ்சாபில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் காட்டியிருக்கிறது. எட்டு மாநகராட்சிகளில் 7ஐ கைப்பற்றி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அந்த வாக்காளர்கள் முன்பு வைக்கப்பட்ட ஒரே தேர்தல் பிரச்னை மூன்று வேளாண் சட்டங்கள் மட்டுமே. மற்ற எல்லா இடங்களையும் விட காங்கிரஸ் சுவைத்த இனிமையான வெற்றி என்பது பதிண்டாவில்தான் நிகழ்ந்திருக்கிறது. ஏனென்றால் அந்த மாநகராட்சியில் காங்கிரஸ் 53 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகாரத்திற்கு மீண்டு அல்லது மீண்டும் வந்திருக்கிறது.
பஞ்சாபில் கனிந்த இந்த வெற்றி அண்டை மாநிலமான ஹரியானாவிலும் நிச்சயமாக எதிரொலிக்கத்தான் போகிறது. ஹரியானாவில் பாஜக தேர்தலுக்குப் பிந்தித் தாளித்துக் கொட்டிய கூட்டுப்பொரியல் கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் மனோகர் லால் கட்டாரை முதலமைச்சராக்கி அதிகாரத்தில் வைத்திருக்கிறது.
எல்லைக்கு அப்பால் நிகழ்ந்த காங்கிரஸின் வெற்றியால், அதாவது பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால், ஹரியானா கூட்டணியில் விரிசல்கள் எழக் கூடும். மேலும், இந்த வெற்றி தில்லி எல்லையில் நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும். விவசாயிகளின் தலைவரான ராகேஷ் டிகைட்டின் கண்ணீர் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாட் இனமக்களை ஒன்றுசேர்த்து வைத்திருந்தாலும், அது பாஜகவைப் பயமுறுத்தும் பிரமாண்டமானதோர் அரசியல் இயக்கமாக மாறிவிட வில்லை; இப்போதைக்கு விவசாயிகளின் போராட்டத்திற்கு அந்த மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் பெரிதாக ஆதரவு இல்லை. ஆகவே உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சரான யோகி ஆதித்யாநாத் இப்போதைக்கு நிம்மதியாய் இருக்கலாம்.
ஆனால் இப்போது மெல்ல எழுந்துவரும் கேள்வி இதுதான்: விவசாயிகள் போராட்டத்தின் அரசியல் விளைவுகளை மனதில் வைத்தாலாவது காவிக்கட்சியால் இனியும் அதை அலட்சியம் செய்ய முடியுமா. மத்திய அரசு தெளிவாகவே சொல்லிவிட்டது, தன்னால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறமுடியாது என்று. ஆனால் ஓரளவிற்குத் திருத்தங்கள் செய்யத் தயாராக இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால் இந்த அழுத்தமான விட்டுக் கொடுக்காத பிடிவாதப் பேரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. இந்த முட்டுச்சந்து நிலவரத்திற்கு அரசியல் ரீதியாக பாஜக பெரியதோர் விலை கொடுக்க வேண்டி வரலாம்.