டெல்லி : பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தேசிய தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த கூட்டத்தில் யார் கலந்து கொள்ள போகிறார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு வரிசையில் கொண்டு வரும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
அதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், வரும் ஜூன் 12ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, இடது சாரிகள், பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம், டெல்லி ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.