டெல்லி : கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த மே 3ஆம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மலைப் பிரதேச மாவட்டங்களில் வசிக்கும் குக்கி, நாகா பழங்குடியின மக்களுக்கும், தலைநகர் இம்பாலை சுற்றி உள்ள மைதேயி இன மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.
பொருளாதாரத்தில் முன்னேறிய மைதேயி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என மலைவாழ் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது. 50 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அமைதியை நிலை நாட்ட முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.
இந்த கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ராணுவத்தினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.
இந்த பயணித்தின் இடையே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்கள் மற்றும் பொது சமூக பிரதிநிதிகளை சந்தித்து ராகுல் காந்தி உரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 3ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிபிடத்தக்கது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செய்லாளர் கே.சி. வேணுகோபால் தன் ட்விட்டர் பக்கத்தில், "ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று பொது சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் ஏற்பட்டு உள்ளது மனிதாபிமான நெருக்கடி என்றும் வெறுப்பை தவிர்த்து அன்பை மட்டுமே அந்த மாநில மக்களுக்கு வழங்க வேண்டும் என கே.சி. வேணுகோபால் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக பிரிவிணைவாத அரசியல் செய்கிறது என்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு பொறுப்பெடுத்து முதலமைச்சர் பைரன் சிங்கை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :மணிப்பூர் கலவரம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு... அமித் ஷா உத்தரவு!