டெல்லி :அனைத்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17 - 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வைத்து நடைபெறும் என காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அனைத்து எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, எதிர்க் கட்சிகளின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் பெங்களுருவில் ஜூலை 17 - 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் 29ஆம் தேதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அடுத்த ஆலோசனை கூட்டம் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து நடைபெறும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவ சேன கூட்டணியில் போய் இணைந்தனர்.